சனி, 30 ஜூன், 2018


விளையும் பயிர்

ஐஷு காரில் இருந்து காலைக் கீழே வைக்காமல் அலறினாள், உள்ளிருந்த செம்பாவின் கழுத்தை இறுக்கி பிடித்து மூச்சுத்திணற வைத்து, கார் கதவில் ஊஞ்சல் ஆடி, ‘ஓ‘ என்று அழுது, என் விரல் படிய கையில் அடி வாங்கி, பெரும் போராட்டத்துக்கு பிறகு என் தோளில் ஏறினாள்.
கண்களை இறுக்க மூடி, முகத்தை என் தோளில் பதித்திருந்தாள். இரு கால்களாலும் என் இடுப்பை இறுக்கியிருந்தாள்.  ஒரு மல்யுத்த வீரனிடம் சிக்கியது போல வலித்தது.  ஆனாலும் சிரிப்பு வந்தது.
‘பயப்படாத ஜஷு…. இது வெறும் டாச்சுதான்..,‘
‘அப்ப்ப்பா… அது ஸ்டேடச்யூ… டாச்சு இல்ல…‘ இது செல்வி.
எங்கள் எதிரே பரந்த மைதானம், வலப்பக்கம் இருபதடி தூரத்தில் புளியமர நிழலில் எங்கள் கார். இடப்பக்கம்,  இத்தனை களேபரத்துக்கும் காரணமான ‘தேமே‘ என்றிருந்த சிலை
15 அடி உயரத்தில் பரந்து விரிந்த மார்பிலும், புஜம், மணிக்கட்டு என எங்கும் வெளிறிப் போன நகைகளும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள், பச்சை என்று மங்கிய வண்ணங்களிலும் தீட்டப்பட்ட அரைக்கச்சுமாய, தலையின்றி ஒரு சிறிய இரும்பு பைப்போடு… இருந்த சிமெண்ட் சிலை,
‘இன்னமும் கூத்து நடக்குதா?..‘
எதிரே நின்ற தம்பியிடம் கேட்டேன்.
‘நடக்குது… மின்ன மாரி ஆர்ப்பாட்டமா இல்லாட்டியும்., வருசா வருசம் ஒரு பார்மலுக்கு நடக்குது‘
செல்வி ‘ப்ப்ச்ச்க்‘ என சிரிக்க, நான் அவள் கையைப் பிடித்து அழுத்தினேன்.
‘குடுங்க அண்ணி நா கொண்டாரேன்….‘
செல்வியும், செம்பாவும் என் தம்பி காளத்தியிடமிருந்து விலகியே நடந்தனர்.  அவன் தோற்றம் அப்படி, செவ்வேறிய வெள்ளையாயிருந்த வேட்டி, கசங்கிய அழுக்கு சட்டை, லேசாக வெள்ளை ஊடுருவிய பத்துநாள் தாடி, மூவர்ண தலை, என்னை ஒரு மாதம் பட்டினி போட்டது போல உடம்பு. எனக்கு அண்ணன் போல வயதானவனாய் இருந்தான்.
‘இல்ல சின்ன பெட்டிதா…  நா பாத்துக்கறேன்… டிக்கில பெரிய பொட்டி இருக்கு…‘
சிலையைத் தாண்டிய பிறகும், கண்கள் மூடியிருந்தாலும் ஐஷுவின் பிடிகள் இறுகின. மண் சாலையை அடைந்தோம் ‘சரி, இங்கதான் பத்து வீடு தள்ளி போனா… அப்பறம் ஆளனுப்பி எடுத்துக்கறலாம்‘ என நான் சொல்ல,
‘இவதா படுத்தறா… இல்லன்னா இவரே எடுத்துப்பாரு…‘ முனகலாக காளத்திக்கு சமாதானம் சொன்னாள்.
நான் சின்ன வயது வாசனைகளை அடையாள காண முற்பட்டேன்.
நடமாட்டம் அதிகமில்லாததால், ஐஷுவின் விசும்பல் ஒலி தவிர.. நிசப்தமாயிருந்தது.
நாங்கள் வீட்டின் புழக்கடையில் மேற்கு பக்கமாய் காய்ந்த முள்வேலியின் இடைவெளி வழியாக உள்ளே புகுந்தோம்…
இதுதான் என் கோட்டை… இப்போதல்ல, இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்.
பரந்த சிமெண்ட்தரை ஓரத்தில். சிமென்ட் மேடையில் பதிக்கப்பட்ட பெரிய பானைகள் பாதி உடைந்து, சிமெண்ட் ஒட்டிய பாகம் மட்டும் இருக்க, அதன் பக்கத்தில் அதே போல பெரிய அடுப்புகள், கறுப்பாய் பாசி, சரிந்த ஓட்டுக் கூரைக்கருகில் ஓற்றைக் கொடுக்காப்புளி மரம், இந்தப் பக்கம் காய்ந்த மண்தரை தாண்டி பின்கட்டு வீடு முற்றிலும் சிதிலமாகி, கொஞ்சம் ஓடும், நிறைய செங்கல்லுமாய்…
நடுவே துணி துவைக்கும் கல்மேடை, புதிதாய், சுவரில் தொடங்கி மேடைவரை நீண்டு உயர்ந்து படமெடுககும் நீல ப்ளாஸ்டிக் பாம்பு நீரைச் சொரிய, துணி துவைத்துக் கொண்டிருந்த, எங்களைப் பார்த்து மலர்ந்து சிரிக்கும் தம்பி மனைவி.
இந்த இடத்தில்தான், வருடாவருடம் நிறைய உறவினர்கள் சூழ, சுற்றிலும் கரும்பு கட்டி, மாவிலை தோரணம் கட்டி, செம்மண், சுண்ணாம்பு அடித்து இடமே புதிததாக, வாசனையாக, புத்தம் புதிய பானை வைத்து பொங்கல்…
சில விசேஷ ஞாயிறுகளில், கழுத்தறுபட்டு முற்றம் முழுதும் ஓடும், அன்றுவரை காலைச் சுற்றிவந்த கோழிகள், அறுபட்ட கழுத்திலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட, கால்கள் கட்டப்பட்டு கழியில் செறுகி சித்தப்பாக்கள் தூக்கிவரும் உரித்த ஆடுகள்…
வரிசையாய் உட்கார்ந்து கறியும், சாதமுமாய் எத்தனை விழாக்கள்…
சட்டென்று உற்சாகமாக, திரும்பி என் மனைவியிடம், ஒரு பழைய நிகழ்வை ‘அப்டித்தான்…‘ என்று சொல்ல ஆரம்பித்த என்னை, அவள் வாயில் விரல் வைத்து எச்சரித்தாள்
அது சரி, அவளும்தான் எத்தனை இரவுகள், எத்தனை எத்தனை கதைகள் கேட்டிருப்பாள்?
மௌனமாக ஒவ்வொருவராக, செருப்புகளை கழற்றி, உள்ளே நுழைந்து, இருண்ட சமையலறை, தாழ்வாரம் கடந்து, கொஞ்சமே வெளிச்சம் பாவிய பெரிய அறையில் நுழைய, சில சுதந்திரத்திற்கு முந்தைய பொருட்களுக்கு நடுவில் கட்டிலில்… அப்பா!!
விஷயம் தெரிந்து வந்திருந்த சில உறவினர்கள் அங்குமிங்குமாய் சிதறியிருந்தனர், வாசலுக்கு வெளிய சில சட்டைகள் தெரிய, பக்கத்து அறையில் வளையல்கள அசையும் மெல்லிய ஒலிகளும், பெண்கள் அடங்கிய குரலில் பேசும் ஒலிகளும் கேட்டன.  அவ்வளவு அமைதி.
ஒருவித பழைமை நாற்றம் வீடு முழுவதும் இருந்தது.
அமைதி, ஐஷுவின் பயத்தை அதிகரிக்க, விசும்பிக் கொண்டிருந்த அவள் என் காதுக்கருகில், அவளுக்கு சாத்தியப்பட்ட உச்சஸ்தாயியில் அழத்தொடங்க… அப்பா உடம்பு ஒருமுறை தூக்கிப் போட்டது.  மிகமிக ஆழத்தில் இருந்து மீண்டு வந்தது போல மெல்ல அசைந்தார், செம்பா உடனே ஐஷுவை உடனே என்னிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.
மற்ற சப்தங்களும், அடங்க வீடு மறுபடி பயமுறுத்தும் அமைதிக்கு வந்தது.  நான் மெல்ல அப்பாவின் கட்டிலில், அவர் அருகே ஒரு காலைமடித்து, ஒன்றை தொங்கப் போட்டு அமர்ந்தேன், கட்டில் அசைந்தது. 
கண்கள் மூடியே இருக்க, எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்த உடம்பில், மார்புக்கு குறுக்காக இருந்த எலும்புக் கையை தூககி, அவர் உள்ளங்கையோடு என் உள்ளங்கையை பொறுத்தி மூடிக் கொண்டேன். அவர் உதடுகள் மெல்ல அசைந்தன, வேறு சலனமில்லை. என் இருகைகளுக்குள் அவர் கையை பொத்திக்கொள்ள, தன்னிச்சையாய் கண்ணீர் வந்தது, மௌனமாய் அப்படியே அமர்ந்திருந்தேன்.
மூடிய கண்களுக்குள் விழிகள் அலைபாய, என்னை உணர்ந்திருப்பாராயிருக்கும், இருபத்தைந்து வருடங்களாக பேசாமல் விட்டதையெல்லாம் பேச நினைத்திருப்பாரோ? இல்லை திட்டுகிறாரோ? உதடு மட்டும் சன்னமாக அசைய, அப்பா படுத்திருந்தார். எவ்வளவு நேரம்? தெரியவில்லை.
சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு, கையை விடுவித்துவிட்டு, எழுந்து அறைக்கு வந்து. உடை மாற்றி, எல்லோருடனும் பேசி, மதியம் வந்திருந்த உறவினர்களோடு சாப்பிட அமர்ந்து, செல்வியும், செம்பாவும் பாதியில் எழ, நான் சாவகாசமாக சாப்பிட்டு எழுந்தேன்.
ஐஷுவுக்கு, கொண்டு வந்திருந்த ப்ரெட்டை பாலோடு கொடுத்து தூங்க வைத்திருந்தார்கள்.
ந்திரா, என் தம்பி மனைவி, அப்பாவிற்கு பால் கொண்டு போனவள் உளறலாய் அலறினாள்.
பிறகு, எல்லாம் வேகமாக எந்திரகதியில் நடக்க, மறுநாள் அப்பா ஒரு விளக்குக்குள்ளும், சுவற்றில் அடித்த சாணத்திலும் அடங்கினார்.  நான் காரியம் முடியும் வரை ஊரைவிட்டு நகரக் கூடாது என உறவினர்கள் மடக்க, பதினாறு நாட்கள் இங்கேயே தங்க வேண்டிய நிர்ப்பந்தம்.
செல்வி அழ, செம்பா நாளையே என்னை விவாகரத்து செய்யப்போவது போல முறைத்தாள். அன்றைய இரவே என் சங்கடங்கள் ஆரம்பித்தன. முதல் சங்கடம், இரண்டாவது சங்கடம் என்று வரிசைப்படுத்த முடியவில்லை.
ஏசி அறையிலேயே தூங்கிப் பழகியவள் செல்வி. இங்கே உயரத்தில் கடகட-வென சப்தத்துடன் ஒடும் ஃபேன், ஆறு மணியானால் எதிரே வருபவர் தெரியாத இருட்டு… இரவு விளக்கு கிடையாது, ஆதலால் வெளி இருட்டு உள்ளேயும் கவிந்து விடும். இது அவர்களுக்கு புதிது.
வெஸ்டர்ன் டாய்லட் உபயோகித்து பழகியவள், இங்கே எல்லாமே திறந்த வெளியில்.
இங்கேயும் ஒரு டாய்லெட் இருக்கிறது, ஆனால், யாருமே உபயோகப்படுத்தாமல் பழையதாகியிருந்தது.  ஒரு ஆள் பின்னாலேயே போய் உட்கார்ந்துவிட்டு, அப்படியே எழுந்து வரவேண்டும், ஒரு சுற்று கூட சுற்ற முடியாது, மானியம் கிடைக்கிறதே என்று கட்டியது. தண்ணீருக்கு எப்போதோ உபயோகித்த கறுத்த பெயிண்ட் டப்பாவும், அமூல்ஸ்ப்ரே டப்பாவும்.
கொசுத் தொல்லை, பூச்சித் தொல்லை, குளிக்க ஓலை கட்டிய பாத்ரூம்….
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
என் சாகசக் கதைகளை, என் கிராமிய நாட்களை, அவளை இழுத்துவைத்து சொல்லிசொல்லி ‘டாடி போர்‘ என அலறி ஓடும்படி செய்திருக்கிறேன், இப்போது அவள் நேரடியாக அதை அனுபவிக்க நேர்கையில் அவளால் அழாமல் இருக்க முடியவில்லை.
இதற்கு நடுவில் ஐஷு, இருளுக்கும், புதிய இடத்திற்கும் மருண்டு, அழுகை நிறுத்திய பாடில்லை.  நான் கோபத்தில் அடித்து அழுகையை மேலும் அதிகப்படுத்தியதுதான் மிச்சம்.,
எப்படியோ இரண்டு நாட்களை ஓட்டிவிட்டாலும், இவர்களின் நச்சரிப்பு என்னை ஒருவிதமான எரிச்சலான மனநிலையிலேயே வைத்திருந்தன. நானே பல சொகுசுகளுக்கு பழகிப் போயிருந்தேன் அதனால் பொருந்திப் போவது கடிணமாக இருந்தது.
பெரிப்பா… வய்சு ஏங்கூட ஏ வெள்ளாட வரமாட்டேன்றா?‘ என் காலைச் சுரண்டினான், நமச்சிவாயம், என் தாத்தா பெயர் காளத்தியின் ஒரே மகன்.
இவனும் செல்வியும் ஒரே வயதுதான், ஆனால் இவன் அவளில் பாதிதான் இருந்தான்.
நான் பத்து வயதில் இப்படித்தான் இருந்தேன். கறுத்து, ஒல்லியாய், செவ்வேறிய, சற்று ப்ரௌன் நிற தலைமுடியோடு, உடல் முழுவதும் தங்க நிற பூனைமுடியும், உதடுகளின் இருபுறமும் மைனாவாய் போல வெளிறிய நிறத்தோடும் இருந்தான், ஆனால் சுறுசுறுவென்று இருந்தான்.
முற்றிலும் புதிய சூழலில் தொடர்ந்து அழுது சோர்ந்த ஐஷு, என் வயிற்றில் சாயந்து, மார்பில் முகம் வைத்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் முகத்தை தூக்கி எதிர்ப்பக்கம் திருப்பி வைத்துக் கொண்டாள்.
அவனைப் பார்த்து, எனக்கே பாவமாக இருந்தது என் இரண்டு பெண்களும், ஏன்? நானும், என் மனைவியும் கூட அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.  பிள்ளைகள் எப்படி தெரியாது, நான் வேண்டுமென்றே செய்யவில்லை, மற்ற காரியங்களில் இது தவறிவிட்டது,
அவனை இழுத்து என் அருகே நிறுத்திக் கொண்டு… கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அட்வைஸ், கொஞசம் கேலி என்று உற்சாகப்படுத்திவிட்டு… இதுவரை எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்த என் மகளின் முகத்தை திருப்பி…
‘ஜஷும்மா… இங்கப் பாரு இது உன் அண்ணன்… ப்ரதர்… இவன் .கூடப் போயி விளையாடறியா?‘
‘ச்ச்ச்சீ… பேடி கக்கா… மாட்டேன்‘
‘அப்டில்லாம் சொல்லக்கூடாது. இதப்பாரு அவன் உனக்கு கோட் காட்டுவான்‘ என்றுவிட்டு அவன் பக்கம் திரும்பி ‘காட்டுவல்ல?‘ என்றேன்
அவன் ஆர்வமாய் தலையசைத்தான்
‘வேஏஏஏஏணாஆஆஆ… கோட் வேணா…‘
‘சரி ரேபிட்… ‘  ‘ரேபிட் காட்டுவியா,‘
அவன் மருட்சியுடன் பார்த்து… பொதுவாய் தலையசைத்து வைத்தான்.
சற்று ஆர்வம் வர, நிமிர்ந்து பார்த்தாள்… மீண்டும் நெருப்புக் கோழி கணக்காய் என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்…
‘சரி ரேப்பிட் வேண்டாம்…  பிக்காக்…பாரட்?‘
‘டாடி பீகாக்… பேரட்… ‘ என்று செல்வி இடைமறிக்க
நான் ‘சரி நீ அக்காவோட போ…‘
அவள் சற்று இறங்கிவர.. இதுதான் சாக்கு என்று
‘பேபி… நீ பாப்பாவ கூட்டிகிட்டு… சிவா கூட அப்டீஈஈ போயிட்டுவா…. சிவா நெறய பறவையெல்லாம் காட்டுவான்…‘ ‘ இல்ல சிவா?....‘
செல்வி… இடதுகாலை தரையில் வேகமாக உதைத்து ‘டாடீ‘ எனறு சினுங்கினாள், பேபி என்றால் அவளுக்கு பிடிக்காது… அவளைக் கண்டுகொள்ளாமல் சிவாவைப் பார்த்தேன்…
சிவா வேகவேகமாக தலையாட்டினான்….
இந்த மூவரணி சற்று தயங்கி செருப்பணிந்து வெளியே செல்ல, நான் கொஞ்சம் ரிலாக்ஸாக உடல் வளைக்க, செம்பா வந்தாள்.
‘அவங்கூட அனுப்பி வெக்கறீங்களே, ஏதாவது பூச்சிபொட்டு கடிச்சா என்னாவறது?‘
‘எங்க ஊரப் பத்தி எனக்கு தெரியாதா?  அதெல்லாம் ஒண்ணுமாகாது…‘
‘பொல்ல்ல்லாஆஆத ஊரு‘
‘இழுக்காத… அவன் சின்னப்பையன், அவனே பயப்படுவான், அப்படில்லாம் போகமாட்டான்…‘
‘இந்த கொசுவுக்கு நமக்கெல்லாம்… அங்கங்க வீங்கி கெடக்கு, இவங்களுக்கு ஒண்ணுமாகல, அத மாதிரிதான், நம்ம பசங்க ஒடம்பு தாங்காது…‘
‘ப்ப்ச்ச்‘
‘பாம்பெல்லாம் சுத்துது… நீங்க போங்க கூட….‘
‘சும்மாரு…‘ நான் திரும்பிக் கொண்டேன்.
சிவாவை பார்த்ததும் எனக்கு மீண்டும் என் பழைய நியாபகங்கள் வரத் தொடங்கின. நானும் இப்படித்தான் அப்பாவியாய் இருந்தேன்… பத்தாம் வகுப்பு அட்டெம்ப்ட் எழுதி காத்திருக்கும் வரை. அப்போது எம்ஜீஆர் இறக்க, ஊரிலிருந்து கிளம்பிய கும்பலோடு கிளம்பி, சென்னை சென்று சீரழிந்து மூன்றுநாள் கழித்து, வந்து நன்றாக உதை வாங்கினேன்.
எம்ஜிஆர், ரஜினி என்று சண்டை படங்கள் பார்த்து, உடம்பு தேற்ற, காலனிக்குள் நுழைந்து, சிலம்பு பயிற்சியில் சேர்ந்து, தரைப்பாடம் முடிக்குமுன், வீட்டில் தெரிந்து உதை வாங்கினேன்.
சிலம்ப நண்பன் ரேஷனில் வேலை செய்ய, அவன் என்னை வேலைக்கமர்த்திக் கொண்டான்.
வாடகை சைக்கிளில் வைத்து, கள்ள மார்க்கெட்டில் கிருஷ்ணாயில், சர்க்கரை, பாமாயில் போன்றவைகளை, அக்கம் பக்கத்து ஊர்க்கடைகளில் விற்று காசு கொண்டுவரவேண்டும், ஓவ்வொரு ட்ரிப்புக்கும், சைக்கிள் வாடகை போக பத்து ரூபாய்வரை கிடைக்கும், சற்று விபரமாகி, உள்ளுக்குள் உள்ளடியாக அதிக காசு பார்க்க கற்றுக் கொண்டேன்.
ரேஷன் விவகாரம் பிரச்சினையாகி, அப்பா தலைமையில் ஊரே திரண்டு ரேஷன் கடைக்கு வர, திருட்டுப் பொருட்களை விற்றுவிட்டு, பின்னால் பெரிய கெரோசின் கேனோடு வந்தவன், சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து ஒளித்து வைத்திருந்த காசை லவட்டிக் கொண்டு, மெட்ராஸ் வண்டியேறி வந்து விழுந்த இடம் கணுக்கால் அளவு சேறு நிறைந்த கொத்தவால் சாவடி.
எமஜீஆர் இறந்த போது வந்து, பஸ்சில் திரும்ப காசில்லாமல், எதிரே புகுந்து, அங்கிருந்த ஓட்டல் முதலாளியிடம் கெஞ்சி, இரண்டுநாள் வேலை செய்து, அந்த காசில் ஊருக்கு திரும்பியதால் அந்த இடம் மட்டுமே பரிச்சயமானதாயிருந்தது.  பழைய முதலாளி, ஓட்டலை விற்றுவிட்டு சென்றுவிட, புதியவர் என்னை துரத்திவிட்டார்.
நான் இரண்டுநாள் சும்மா பீச், சினிமா என்று சுற்றி, மறுபடி சாவடி வந்து, மூட்டை தூக்க முயன்று தோற்று, பின் கையில் இருந்த காசில் சில்லறையாக வாழைப்பழம் வாங்கி. போலீஸ் ஸ்டேஷன் அருகில் கோணியில் வைத்து விற்று, மறுபடி வாங்கி விற்று, பழம், சீப்பாகி, சீப்பு தாராகி, தார் லாரி லோடாகி, மார்க்கெட்டுக்குள் மொத்த வியாபாரம் பிடிபட, அப்படி இப்படி ஒரு கடையில் இடம் பிடித்தேன்…
கொத்தவால் சாவடியின் உள்ளே கமுக்கமாய் இருந்த கல்லூரிக்கு படிக்கவந்த செம்பாவை காதலித்து கைப்பிடித்து, மார்க்கெட் கோயம்பேட்டுக்கு மாறும்போது, கவனிக்கவேண்டியவர்களை கவனித்து.. ஒரு கடைக்கு முதலாளி ஆனேன்… என் பத்து வருட அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரே விஷயம்… இங்கே யாரையும் ஏமாற்றுவது மிக சுலபம்.  அதைவிட  வாங்குவது மிகமிக சுலபம்.
இப்போது, கோயம்பேடு கடை, அருகிலேயே நெற்குன்றத்தில் வீடு, பிள்ளைகளுக்கு பெரிய பள்ளியில் ஆங்கில வழி கல்வி, கார் என செட்டிலாகிவிட்டேன்.  என் கல்யாணம், கச்சேரி என்று எதற்கும் என் குடும்பத்தார் வரவில்லை, நானும் சொல்லவில்லை.  பெண்களின் காதுகுத்து கூட நாதெள்ளாவில் நாற்பது சொச்ச ரூபாயிலும், வடபழனி முருகன் கோவிலில் மொட்டையுமாக முடித்துக் கொண்டேன்…
நடுவில் என் தம்பி திருமணத்திற்கும். இதோ இந்த சிவாவின் காதுகுத்துக்கும் என்று வெகுசில முறைகளே ஊருக்கு வந்திருக்கிறேன், அப்போதெல்லாம் அப்பவும் நானும் எதிர்எதிர் திசைகளைப் பார்த்து நிற்போம்…
மேலும் இரண்டு நாட்களில், ஐஷு தெளிவாகிவிட்டாள… செல்வியும்.  இப்போது சிவா, தலைக்கு எண்ணை வைத்து, செல்வியின் பவுடர் போட்டு, சட்டையை இன் செய்து, செருப்பு கழுவி அணிந்து, கொஞ்சம் மெருகேறினான்.  என்ன? சற்று. சற்று என்ன? நிறையவே ஊட்டக்குறைவு, சட்டையை தோய்க்கும் போது உடனிருந்து மேற்பார்வை பார்ப்பதாக சந்திராவின் புகார் ஒரு பக்கமிருந்தாலும், அவள் முகத்தில் சந்தோஷமிருந்தது.
ஒரு முறை, வெளியே போனபோது, அந்த சிலையின் கீழே தேங்காய் மட்டையும், ரப்பர் பந்துமாய் ஐஷுவும், செல்வியும் சிவாவுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு முறை, செல்வி தலைக்கு பின்னல் போட்டு, ரிப்பன் கட்டி, பூ வைத்துக் கொண்டாள், சந்திரா கை வண்ணம். இப்போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது என யாரோ முணுமுணுக்க, ‘கொழந்ததானே பராவாயில்ல‘ என்று சந்திராவே சமாதானம் செய்தாள்.
இன்னொரு முறை,  செல்வி ஒன்று, இரண்டு என்று நம்பர் போட்டு எனக்கு தோசை சுட்டு கொடுத்தாள்.
இப்போது, ஐஷு, நாங்கள் கூப்பிட்டால் கூட வருவதில்லை, சிவாவுடன் படுத்துக் கொள்கிறாள். ஓடமாஸ் க்ரீம் தடவிய பிறகே தூக்கம் வருகிறது, ஐஷுவுக்கு அவள் தூங்கிய பிறகே தடவ முடிகிறது.
நான் எங்கேயும் செல்ல முடியாததால், செம்பாவே காரில் டவுனுக்குப் போய், இரவு விளக்கு, டேபிள் ஃபேன், புதிதாய் சீலிங் ஃபேன், டார்ச் லைட், ஓடாமாஸ் க்ரீம்கள், கொசு விரட்டிகள், தலையணைகள், புதிதாய் ப்ளாஸ்டிக் பேட்டுகள். என வாங்கிவந்தாள்.  சிவாவுக்கு என்று சில புதுத்துணிகளும், ஹார்லிக்ஸ் பாட்டில், பிஸ்கட்டுகள், சில டானிக்குகள் என வாங்கிவந்தாள்.
இந்த டாய்லட் மேட்டருக்குத்தான் வழி தெரியவில்லை… இந்த விஷயத்தில் செல்வியைத்தான் சமாளிக்க முடியவில்லை.
ட்டாம் துக்கம் அன்று இரவு சற்று இறுக்கமான இரவானது.  உறவுகளில் ஏதோ ஒரு பெரிசு, ‘என்னப்பா உங்கப்பா ஏதாச்சும் உயில், கியில் எழுதி வச்சிருக்காரா?‘ என துவங்க., செம்பா காதுகளை தீட்டிக் கொண்டாள்
எனக்கு தெரிந்து, இந்த வீடும், ஒரு பத்து பன்னிரெண்டு ஏக்கர் நிலமும்தான் எங்கள் சொத்து.  நான் எந்த ரேஷன் கடையில் டெம்பரரியாக ‘வேலை‘ பார்த்தேனோ, அதில்தான் தம்பி பில் க்ளார்க். பெரிய வரும்படி இல்லை, அதுவும் அப்பாவின் நேரடி கண்காணிப்பில் ‘மேற்படி வரும்படி‘க்கும் வழியில்லை. ஆனால், மொத்த சொத்தும் என் கார் விலை போனால் அதிகம்.
‘அத விடுங்க… அவரே போயிட்டாரு‘ நான் அடக்கினேன்,
செம்பா என்னை முறைத்தாள்….  எழுந்து ஐஷுவை, சிவா அருகிலிருந்து தூக்கிக் கொண்டு போய்விட்டாள்.
லர், கலர், வாட் கலர் டூ யூ ச்சூஸ்…?‘ செல்வி கேட்க…
அவளோடு ஐஷு, மேலும் சில வாண்டுகள்….
சிவா சற்று தூர தனித்து நின்று… ‘பச்சை‘, ‘செவப்பு‘, ‘நீலம்‘ என்று சொல்லசொல்ல… ஆர்ப்பாட்டம் அதிகமானது.
‘நோ‘, ‘நோ‘, ‘நோ‘, என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் செல்வி.
அவன். ‘சாம்பல் கலரு, வானம் கலரு‘ என்று மாற
அதற்கும், ‘நோ‘ சொல்லிக் கொண்டு இருந்த செல்வி….. கடைசியாக அவன் தோல்வியை ஒப்புக் கொள்ள… ‘ஆஷ் கலர்..‘ என்று கத்த, மற்ற வாண்டுகள் சகிதம் சிதறி ஓட, சிவா, இவர்களை விட்டு மற்ற பையன்களை நோக்கி ஓடி, ஒருவனை ‘அவுட்‘ செய்தான்.
அடுத்து, அவன் தனித்து நிற்க… இவர்கள் தலை கோர்த்து கலரை முடிவு செய்து…
‘கலர், கலர்… வாட் டூ யூ ச்சசூஸ்…?‘
அந்த சிறுவன்…. ‘செவப்பு‘, ‘பச்சை‘ என்று விபரமாக சொல்லி… அவனும் தோல்வியை ஒப்புக் கொள்ள… செல்வி ‘மரூன்…‘ என்று ஓட… மீண்டும் ஒரு துரத்தல்….
இந்த ஆட்டத்தை சொல்லிக் கொடுத்த நான் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்… தொலைந்து போன ஆட்டம்தான்… இங்கே ஒன்றுமில்லாத இடத்தில் உற்சாகமான ஆட்டம்.  செல்வி சந்தோஷமாக என்னைப் பார்த்தாள்.
ஷுவிடம் ஒரு பெட்டி நிறைய கலெக்ஷன் இருந்தது.  கலைடாஸ்கோப், கண்ணாடி, வளையல் துண்டுகள், செய்தித்தாள் கொண்டு வீட்டில் செய்தது, சிவா கைவண்ணம், சிகரெட் அட்டையில் வெட்டி செய்த நாய், கோலிகுண்டுகள், சிலபல சினிமா நட்சத்திரங்களின் படஙகள், ஒரு காமிக்ஸ் புத்தகம், ஒரு ப்ளாஸ்டிக் செஸ் அட்டை, இதுதவிர, முக்கியமாக, ஒரு கிளிக்கூண்டு, உள்ளே இறக்கை வெட்டபப்ட்ட கிளி, முதலில் பயந்தவள், அந்த கிளியை தன் தோளில் வைத்துக் கொள்கிறாள், அதுவும் ஐஷுவைப் பிடித்துக் கொண்டது… ஐஷு சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லியது.
கிராமத்து கிளியின், ‘டாடி‘, ‘டாடி‘, ‘மம்மி‘, ‘மம்மி‘, கூடவே ‘ச்ச்சிவா‘, ‘ச்ச்சிவா‘
ப்போதெல்லாம், ஐஷு வாயைத்திறந்தால் சிவா புராணம்தான்…
‘டாடி, யூ நோ… ஷிவா.. ஸ்விம் பாஸ்ட்..யூ நோ‘
‘டாடி.. ஷிவா… ஜம்ப்ட் ன் ய ட்ட்டீப் வெல் யூ நோ…‘
‘டாடி.. வீ பேத்ட் இன்… பம்ப செட்… யூ நோ…‘
‘டாடி… ஐ சா குட்டி ஸ்னேக்…. சிவா காட் ஒன்…‘
ஒரு நாள், பாட்டில் நிறைய நீரில் சில தலைப்பிரட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து ‘டாடி ஃபிஷ்..‘
செல்வி சிரித்தபடி, எல்லாவற்றையும் ஆமோதித்தாள்…
தினைந்தாம் நாள் இரவு நடப்பு முடிந்து சாப்பாடு ஆனதும்… ஆளாளுக்கு ஏற்றிவிட மீண்டும் சொத்துக் கணக்கு பற்றி பேச்சு வந்தது…
கரும்பு விவசாயம் அப்படி ஒன்றும் லாபமில்லை என்றும், அப்பா வைத்திய செலவு, அது இது என்று ஒரு இரண்டு லட்சம் கடன் ஆகிவிட்டது என்றும்… மீதம் பப்பாதி பிரித்து கொள்ளலாம் என்றும் முடிவாக…   நான் பேசுமுன் …
செம்பா… சந்திராவுடன்..ஆடிய ஆட்டத்தின் சுருக்கம்
‘அதெப்படி.. இருபத்தஞ்சு வருஷமா… எல்லா வருமானத்தையும் ஆண்டு அனுபவிச்சது யாரு… எம் புருசன் சல்லிக் காசு கூட பாக்கல… மாமா மட்டும் மருந்தா சாப்பிட்டா கடன் ஆச்சி… குடும்பமே உக்காந்து சாப்பிட்டா ஆகாம என்ன பண்ணும்.. எங்க வீட்டுக்காரருந்தான் விவசாயம் சம்பந்தப் பட்ட வேல, பாக்கறாரு… காய், பூ, பழம் வித்துத்தான் வீடு வாங்கினாரு, வாங்கி விக்கறவரு இவ்வளவு பண்ண முடிஞ்சா, வௌய வெக்கிறவங்க எவ்வளவு பாத்திருப்பீங்க… ஒளிச்சி வெச்சிருக்கறதெல்லாம் வெளிய எடுத்தாகட்டும்…  இது செம்பா…..
‘உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு மிஞ்சாது… எதுல லாபம்னு எனக்கு தெரிஞ்சதாலதான் நா சென்னையிலேயே இருந்தேன்…‘ மனசுக்குள் நினைத்தேன், சொல்ல முடியவில்லை….
சந்திரா ஊடாக ஆடிய ஆட்டம்
‘இங்க யாரும் மோட்டாரும், பட்டுமா மினுக்கிகிட்டு இல்ல, எந்த எரவாணத்துலையும் ஒளிச்சி வெக்கல, நாளா பொழுதா பீ, மூத்திரம் அள்ளிகிட்டு, வேளக்கி சரியா சோறு துன்ன முடியாம, மருந்தும், மாயமுமா காப்பாத்திகிட்டு வந்ததுக்கு நல்ல பேரு சாமி.. எம்புள்ளைய நாங் காப்பாத்த வேணாமா… பெரியவங்க நீங்களே நல்ல நாயத்த சொல்லிடுங்க…‘
அம்மானை மாற்றி, மாற்றி நடக்க, நானும், தம்பியும் அவர்களை தடுக்கப் பார்க்க, ஒரு கட்டத்தில்…
நடப்பது புரியாமல், நின்று கொண்டிருந்த சிவா, சட்டென்று ஐஷு-வை அங்கிருந்து அழைத்து
செல்ல கையைப் பிடித்து இழுத்தான்… செம்பா, அவன் கையைத் தட்டி தள்ளிவிட… பூஞ்சையான ஆள், நிலை தடுமாறி அருகே இருந்த எதன் மீதோ விழுந்து… உதடு கிழிந்து ரத்தம்…. சந்திரா பாய்ந்து செம்பா கூந்தலைப் பிடிக்க… தடுக்க பாய்ந்த காளத்தியின் கை என் மனைவியை அடிப்பது போல எனக்கு தெரிய….
‘டேஏஏஏய்ய்ய்ய்…‘ நான் பல்லைக் கடித்துக் கொண்டு பாய்ந்…..  மிகவும் வருத்தப்பட்டேன்…. நான் அடிக்கவில்லை… ஒரு அங்குலம் நகரவில்லை… கை உயர்த்தி நான் கொடுத்த குரலுக்கு… நாற்பதை நெருங்கும் காளத்தி அப்படியே மடங்கி உட்காரந்து… பின் வாங்கி. சுவரருகே ஒண்டி… ‘அப்ப்பேஏஏஏ,,,‘ என்று கண்மூடி அலறினான்.  அவன் உடல் அப்படியே குளிர் ஜுரக்காரன் போல நடுங்கியது....
முழு வீடும் ஸ்தம்பித்தது… .
அவரவர், சப்தமின்றி நழுவ, காளத்தி கழுத்தை வெட்டி, வெட்டி விசித்தபடி சில நிமிடம்,  பேசாமல் சில நிமிடம், பக்கத்து சுவரில் நகத்தால் கோடு போட்டபடி சில நிமிடம், என உட்கார்ந்திருந்து, அதே நிலையில் பக்கவாட்டில் சரிந்து, தூங்க ஆரம்பிக்க, சந்திரா ஏதோ
முணுமுணுத்தபடி விசித்துக் கொண்டே வந்து ஒரு தலையணையை வைத்து அவன் தலையை தூக்கி வைத்துவிட்டு போனாள்.
டுத்த நாள், காரியம் அதிகம் பேச்சில்லாமல் நடந்தது.  ஐயர், சமையல் கோஷ்டி என்று வெளி ஆட்களின் சப்தம், பாத்திரம் உருளும் சப்தம், வந்திருந்த உறவினர்கள் தங்களுக்குள் அடங்கிய குரலில் பேசும் சப்தம் தவிர வேறு இல்லை…. நாங்கள் யாரும் பேசிக் கொள்ளவில்லை…
மதியமே எல்லாம் முடிய, மாலை கிளம்ப செம்பா ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தாள்… இரவே பாதி வேலைகளை முடித்துவிட்டாள்… செம்பாவைவிட செல்வி அதிக மௌனமாயிருந்தாள்.
வாங்கியவற்றை இங்கேயே விட்டுவிட்டு, வரும்போது கொண்டு வந்த பொருட்களை காரில் ஏற்றி வைத்து… எல்லோரும் காரில் ஏறுமுன்… செல்வி சிவாவைப் பார்த்து ஒரு அரைப் புன்னகை செய்து, தலையாட்டினாள். 
நானும் அவனைப் பார்த்தேன், செம்பாவிடம் அவனை சென்னை அழைத்து சென்று படிக்கவைக்கலாம் என பேசியிருந்தேன்… இப்போது அதைப்பற்றி எல்லாம் பேசும் மனநிலையில் இல்லை.
உதடு வீங்கியிருந்த சிவா பேசவில்லை…  திடீரென்று அவசரஅவசரமாய் உள்ளே ஓடி  ஒரு அட்டை பெட்டியை தூக்கிவந்து காரின் பின் சீட்டில் வைத்தான்… மறுபடி ஓடி அந்த கிளி கூண்டை கொண்டு வந்தது வைத்தான்….
நான் மௌனமாக என் தம்பியின் கைகளைப் பற்றி இறுக்கி விட்டு காரில் ஏறினேன்…
கார் கிளம்பி… தெரு திரும்பும்வரை.. சிவா கை அசைத்துக் கொண்டே நின்றிருந்தான், காளத்தியும், சந்திராவும் அமைதியாக நின்றிருந்தனர்.
அப்போது ஐஷு… அவளால் கிளிக்கூண்டை அந்த அட்டைப் பெட்டியில் வைத்து, பெட்டியை, அவளால் முடியாத போதும் தூக்கி….‘ஏய்ய்… ஏய்ய்.. ஏய்ய்‘ என நான் கத்த, கத்த ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளினாள்.
அதற்குள் இருந்த சிவாவின் பொக்கிஷங்கள்… தரையில் சிதறின…. 
கிளிக்கூண்டு, உருண்டு உருண்டு சிவாவின் காலடியில் வந்து நின்றது….
கிளி முறிந்த சிறகை படபடவென அடித்துக் கொண்டே…‘க்ரீச்..கரீச்..‘ என கத்திக் கொண்டிருந்தது…
‘ச்சிவா‘, ‘எனிமி‘, ‘ச்சிவா‘,  ‘எனிமி‘, ‘ச்சிவா‘. ‘எனிமி‘…





வியாழன், 17 மார்ச், 2016

திங்கள், 25 ஜனவரி, 2016

டாஸ்மாக் 1

டாஸ்மாக் பார் உள்ளே செல்ல நேர்பவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியர்வகள் ...

லேபல் காசுக்கு மேலே பத்து ரூபாய் ... ஐம்பது காசு பெறாத பிளாஸ்டிக் கப் ஐந்து ருபாய்.... தண்ணீர் பாக்கெட்  ஐ எஸ் ஐ இருப்பது, இல்லாதது எதுவானாலும் காசு...... குப்பைக்கு மட்டுமே  லாயக்கான சிறு தீனிகள்.

தரை முழுதும் கடித்து துப்பிய பீர் பாட்டில் மூடிகள், chair , டேபிள்  எங்கும் பளபளக்கும் excise டிபார்ட்மெண்ட் ஸ்டிக்கர்கள், கழுவபபடாத வாந்தி ,
வயிற்றை குமட்டும் நாற்றம் , 

எல்ல கிருமி பயபுல்லய்ங்கலும் இங்கேதான் இருக்காங்க ...

நீ வாங்கும் ஒவ்வொரு பாட்டிலும் அரசும்... அரசுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களும் கொழிக்கிறார்கள்...

உன் உரிமை... உன் பணம் ... ஜாகோ க்ரஹக் ஜாகோ 

ஏன் யாருக்கும் அக்கறை இல்லை.
  

சனி, 23 ஜனவரி, 2016

டாஸ்மாக்

எல்லோரும் குடியின் தீமைகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குடியுடன் சேர்ந்த மற்ற தீமைகளை பற்றி யாரும் பேசுவது கிடையாது .  சிக்கன் வாங்க கடைக்கு சென்றால் உயிருடன் 130, உரித்தது 160, தோல் நீக்கியது 190 என்று கண் எதிரே பார்த்து பார்த்து வாங்க முடிகிறது. அனால் டாஸ்மாக் பாரில் விற்கப்படும் சால்னா எனப்படும் கறி வகைகள் நினைத்தாலே குமட்டுபவையாய் இருக்கின்றன;

கடைகளில் கழிவாய் விற்கப்படும் கோழிப் கால்கள், கோழி தலைகள்,  பலர் வேண்டாம் என்று கழித்து கட்டும் லிவர் போன்றவை, கெட்டுப்போன மீன்கள், போன்றவற்றை கரமான மசாலாவில் முக்கி பொரித்து விற்கிறார்கள். அந்த எண்ணெய் ... நினைக்கும்போதே குமட்டுகிறது .  ஐந்து நிமிடம் தொடர்ந்தாற்போல் அந்த கடை அருகே பொரிக்கும்போது நின்றால் வந்தி நிச்சயம் .

போதையில் இருந்தால் ஒழிய அவற்றை தின்ன முடியாது ..

ஏன் யாருக்கும் அக்கறை இல்லை
சமிப காலங்களில் நான் பார்க்கும் மாற்றங்களில் முக்கியமானது மருத்துவ துறையில் ஏற்பட்டதுதான்:

சென்னை முழுவதும் விரவியிருக்கும் - செயற்கை கருத்தரிப்பு மையம்கள் 

கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்காகியிறது :


புதன், 1 ஏப்ரல், 2015